
ஊடலுக்குப் பிறகான கூடல் தம்பதியிடையே மிக இனிமையாக இருக்கும். கூடுதல் ஆனந்தம் கிடைக்கும்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது உறவு கொண்டால், அது இருவருக்குமே நல்லதல்ல.

காதலிக்கும்போதோ, திருமணமான புதிதிலோ இருவரும் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள். மோகம், ஆசை முடிந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு வந்தபிறகும், அதே காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடினால்… சிறப்பு.

ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. சில சூழ்நிலைகளில், ஒருவர் மீது ஒருவருக்கு கோபம், வெறுப்பு, பகை, ஏன் சிலருடைய மனதில் போட்டி மனப்பான்மைகூட வந்துவிடுகிறது.

இந்த உணர்வுகளோடு தாம்பத்திய உறவுக்கு முயன்றால், பதற்றத்தில் விந்து முந்துதலில் ஆரம்பித்து ஆண்மைக்குறைபாடு வரைக்கும் ஏற்படலாம்.

கணவருக்கு விந்து முந்தினால், மனைவிக்கும் உறவில் உச்சக்கட்டம் கிடைக்காது. கணவனுக்கு தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்கிற விரக்தியில் கோபம், இயலாமை ஆகிய உணர்வுகள் வந்துவிடும். மனைவிக்கோ, `பிடித்த உணவை ஆசையாய் ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டவுடன் தட்டை எடுத்துச்சென்றுவிட்டது’ போன்ற ஏக்கம் வந்துவிடும்.

விறைப்புத்தன்மை இன்மையும் கணவனும் மனைவியும் முழுமையாக உறவில் ஈடுபட முடியாதபடி செய்துவிடும்.

இதுவே நல்ல மனநிலையிலிருக்கும்போது தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், கூடுதலாக மகிழ்ச்சி ஹார்மோன்களும் சுரந்து படுக்கையறையை சொர்க்கமாக்கும்.