கோவை மாவட்டத்தில் மது குடித்தது கணவருக்கு தெரியாமல் இருக்க பெட்ரோலை குடித்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம் பெண் பீர் வாங்கி குடித்துள்ளார்.
அப்பொழுது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்துள்ளது. இந்நிலையில் இளம் பெண் மது குடித்தது கணவருக்கு தெரியாமல் இருப்பதற்காக, கணவர் இருசக்கர வாகனத்திற்கு ஊற்றுவதற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.