மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் பூனாவாலா என்ற வாலிபர் தன்னுடைய காதலி ஷ்ரத்தா என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொலைசெய்தார். அதோடு காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று காடுகளில் விசியெரிந்தார். கொலை மே மாதம் நடந்திருந்தாலும், இப்போதுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அஃப்தாபுக்கு ஏற்கெனவே வெள்ளிக்கிழமை மூன்று முறை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அஃப்தாப் காதலி ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்று மீண்டும் அஃப்தாப் உண்மை கண்டறியும் சோதனைக்காக திகார் சிறையிலிருந்து தடயவியல் ஆய்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
சோதனை முடிந்த பிறகு காரில் ஏற்றியபோது போலீஸ் வேனை மற்றொரு கார் மறித்தது. காரிலிருந்து இறங்கிய கும்பல் வாளுடன் போலீஸ் வேனை நோக்கி வந்தது. 15 பேர் கொண்ட கும்பல் அஃப்தாப் இருந்த போலீஸ் வாகனத்தை தாக்க முயன்றது. அவர்களில் இரண்டு பேர் போலீஸ் வாகனத்தை தாக்கினர். மற்றவர்களும் போலீஸ் வாகனத்தை விரட்டிச் சென்று தாக்க முயன்றனர்.

இதனால் போலீஸார் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டடனர். போலீஸ் வாகனத்தின்மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால், அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு எப்படி அஃப்தாபின் உண்மை கண்டறியும் சோதனை முடியும் நேரம் தெரிந்திருந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ரோஹினி கூறுகையில், “குருகிராமை சேர்ந்த குல்தீப் தாக்குர், நிகம் குஜார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் குருகிராமிலிருந்து ஒரே காரில் வந்திருக்கின்றனர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸ் வேன் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது” என்று தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், “நாங்கள் குருகிராமிலிருந்து வந்திருக்கிறோம். எங்கள் சகோதரியை அவன் 35 துண்டுகளாக வெட்டியிருக்கிறான். நாங்கள் அவனை 70 துண்டுகளாக வெட்டுவோம். போலீஸார் அஃப்தாபுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்” என்றார்.
தாக்குதல் நடத்தியது யார்? எனக் கேட்டதற்கு, “நாங்கள் இந்து சேனாவை சேர்ந்தவர்கள்” என்றார். நீதியை கையில் எடுத்துக்கொண்டு வாளால் தாக்குவது சரியா என்று கேட்டதற்கு, “நாங்கள் அவனைக் கொலைசெய்வோம். எங்கள் சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் பாதுகாப்பு இல்லையெனில் நாங்கள் உயிரோடு இருந்து என்ன பயன். ஷ்ரத்தாவுக்கு நீதி வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இது குறித்து இந்து சேனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடந்த சம்பவம் தனிப்பட்டவர்களின் உணர்வுகள். அஃப்தாப் எப்படி இந்து பெண்ணை வெட்டினான் என்பதை இந்தியா முழுக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இது போன்ற வன்முறை சம்பவங்களை எங்கள் அமைப்பு ஊக்குவிப்பதில்லை. இந்திய சட்டத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வன்முறையாளர்கள் போலீஸ் வாகனத்தை விரட்டிச் சென்று தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. அதோடு அஃப்தாபிடம் விசாரணை நடத்தி ஷ்ரத்தாவைக் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதன் சோதனையில்தான் அவை ஷ்ரத்தாவைக் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட கத்திகளா என்று தெரியவரும்.