30 கிமீ தூரம் வரை பயணிக்க அனுமதி கேட்டு நீலகிரியில் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் – பேரணி

ஊட்டி:  ஆட்டோக்கள் பயணிக்கும் தூரத்தை அதிகரிக்க வலியறுத்தி நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். ஊட்டியில் பேரணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆட்டோக்கள் குறிப்பிட்ட தூரம் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்கள் 15 கிமீ தூரம் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிர்ணயித்த தூரத்தைவிட அதிக தொலைவிற்கு அழைத்து செல்கின்றனர். இதனால், சுற்றுலா வாகன டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், அதிக தூரம் செல்லும் ஆட்டோக்களை பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வந்தனர்.  

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் ஆட்டோக்கள் பயணிக்கும் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆட்டோக்கள் 30 கிமீ தூரம் வரை செல்ல எல்லை அளவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

இந்த பேரணி லோயர் பஜார், காபி அவுஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, டிபிஓ வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்து. பேரணியின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நீலகிரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது நீலகிரி மாவட்டத்தில் 15 கிமீ தூரம் வரையே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஊட்டி நகரில் மட்டுமே 1,800 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால், இந்த ஆட்டோக்கள் நகரின் எல்லையான 3 கிமீ தூரத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தொலை தூரங்களுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும். இதனால், சில சுற்றுலா தலங்களுக்கு ஆட்டோக்கள் சென்று வருகின்றன. ஆனால், நிர்ணயித்த தூரத்தைவிட ஆட்டோக்கள் அதிக தூரம் பயணிப்பதாக கூறி அபராதம் விதிக்கப்படுகிறது.  மேலும், பல்வேறு பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்கள் 30 கிமீ தூரம் வரை பயணிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பான மனு ஒன்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஆட்டோ டிரைவர்கள் சங்க நிர்வாகிகள் வழங்கினர். நேற்று நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடாத நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.