கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள்:அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில்…….

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம்.

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முன்மொழிவை அமைச்சரவையின் அனுமதிக்கு முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (25) கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகள் புதிய செடிகளை நடுவதை முற்றாக நிறுத்தியுள்ளதாக அவர் மேலும்  சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலாக தற்போதையை பயிர்களைப் பேணுவது அல்லது அந்தக் காணிகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசாங்கத்தின் பொது விடயமொன்றுக்கு சிறிய அளவிலான காணியையோ அவர்கள் வழங்குவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, இந்தப் பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்கு அவசியமான சட்ட வரைபு நடவடிக்கைகளுக்கு தமது தரப்பின் ஆதரவை வழங்குவதாக எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். அதேபோன்று, பாரியளவிலான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரித்து அவற்றை சிறிய அளவிலான தேயிலைக் கைத்தொழிலுக்கு வழங்கி அதன் மூலம் நாட்டின் தேயிலைக் கைத்தொழிலை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் முன்மொழிந்தார்.

அதேபோன்று, தேயிலைக்கான பசளை மற்றும் பூச்சிகொல்லி என்பன சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை மற்றும் அவற்றின் போதுமான தன்மை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், பிரதேச ரீதியாகக் காணப்படும் பெருந்தோட்டக் கைத்தொழில் தொடர்பான சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ குணதிலக ராஜபக்க்ஷ, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ வீ. இராதாகிருஷ்ணன், கௌரவ சுதத் மஞ்சுள மற்றும் கௌரவ அகில எல்லாவல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.