கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், இ.சி.ஆர். மற்றும் சக்தி பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் விசாரணையை பெருமளவு முடிக்கப்பட்டு உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை என்றும், இரு பள்ளிகளையும் முழுமையாக திறப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்றும், மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் இ.சி.ஆர். பள்ளி மற்றும் சக்தி பள்ளி அகியவற்றில் பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை 3500லிருந்து 1500 ஆக குறைந்துள்ளதாகவும், 15 நாட்களில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளதாகவும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் எம்.எம்.ரவி என்பவர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், பள்ளி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், சின்னஞ்சிறு மழலைகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொது தேர்வை எதிர்நோக்கியுள்ள 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளார். அதன்படி, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி இ.சி.ஆர். பள்ளி மற்றும் சக்தி பள்ளி ஆகியவற்றில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.

பள்ளியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம் என்றும், ஆனால் ஏ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3வது மாடியை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விடுதி உள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும் என்றும், அனுமதி அளிப்பது குறித்த உரிய முடிவெடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து பள்ளியுடன் ஆலோசித்து, அதற்கான தொகையை பெற்று காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம் என்ற என்றும், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை வளாக பாதுகாப்பில் ஈடுபடுத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த சி மற்றும் டி பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மீண்டும் நீதிமன்றம் அப்போதைய நிலையை ஆராயும் என கூறி வழக்கின் விசாரணையை ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

எல்.கே.ஜி. முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.