திருப்பதி தரிசனத்தில் மாற்றம்; தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு!

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ருத்ரதாண்டவம் ஆடியது. இதை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இதன் ஒரு பகுதியாக திருப்பதி திருமலை தேவஸ்தானமும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியது. இதையடுத்து பிரம்மோற்சவ விழாவில் சில பூஜைகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் விழா 2022 வழக்கமான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொதுவாகவே, திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்தவரை கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் டிசம்பர் 1ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்கி பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் இலவச தரிசனத்திற்காக இரவு முழுவதும் காத்திருப்பு மண்டபத்தில் அடைபட்டுள்ள பக்தர்கள் அதிகாலையிலேயே ஏழுமலையானை வழிபட இயலும் என்றும், தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10000 ரூபாய் நன்கொடை வழங்கி 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்கள் இனிமேல் இன்று 30 ம்தேதி முதல் திருப்பதியில் உள்ள மாதவம் விருந்தினர் மாளிகை கவுண்டரில் டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமலை, திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது.

நாளை (வியாழக்கிழமை) முதல் விஐபி பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவு காத்திருக்கும் பக்தர்கள் மறு நாள் காலையில் விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து விஐபி பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடியும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.