பழமையான 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்! அறங்காவலர்களை நியமனம் செய்ய மாவட்டக் குழு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பழமையான 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், கோவில்களுக்கு  அறங்காவலர்களை நியமனம் செய்ய அறநிலையத்துறை சார்பில் மாவட்டக் குழு அமைக்கவும் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த கோவில்களுக்கு வரும் வருமானங்களைக் கொண்டும், கோவில் சொத்துக்கள் மூலம் வரும் வருமானங்களைக் கொண்டும் , பல்வேறு அறப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 10 கல்லூரிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு இரு கல்லூரி கள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான, தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர்களின் குழு கூட்டம் நேற்று அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது  மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம். இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் – கங்கை முத்து மாரியம்மன், சங்கராபுரம் – ராஜநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் – சந்திரலிங்கம், கடலூர் மாவட்டம், உடையார்குடி – அனந்தீஸ்வரர், சிவகங்கை மாவட்டம், நரியனேந்தல் – முத்தையாசுவாமி, மானாமதுரை – சங்குபிள்ளையார், கோவை மாவட்டம், கோவில்பாளையம் – விநாயகர், செட்டிப்பாளையம் – காளியம்மன் உள்ளிட்ட 138 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில் திருப்பணிகளுக்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், துறை இணை ஆணையர் அர.சுதர்சன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியார், முனைவர் சிவ ஸ்ரீ.கே.பிச்சை குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சுமார்  10 லட்சத்துக்கும் வருவாய் குறைவான கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்ய அறநிலையத்துறை சார்பில் மாவட்டக் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரூ.2 லட்சம் முதல் ரூ- 10 லட்சத்திற்கும் வருவாய் குறைவான 672 கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்ய தகுதியுள்ளோர் பட்டியல் தயாரிக்க 3 பேருக்கும் குறையாத மற்றும் ஐந்து பேருக்கும் மிகாத அலுவல்சாரா உறுப்பினர்களை கொண்ட மாவட்டக்குழு அரசால் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இக்குழு சார்பில் அறங்காவலர் நியமனம் செய்ய தகுதியுள்ளோர் பட்டியல் தயார் செய்து கமிஷினரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதால், மாவட்டக்குழு நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்த மாவட்டக்குழுவில் இடம் பெற பலர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு மாவட்ட குழு நியமனம் செய்வது தொடர்பாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 7 மாதங்களாகியும் மாவட்டக்குழு அமைப்பதற்கான அரசாணை வெளியிடாத நிலையில் அறங்காவலர் குழு அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மாவட்ட குழு அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டு அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மண்டல இணை ஆணையர் பெறப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் தகுதியுள்ள நபர்களை கொண்ட மாவட்ட குழு விரைவில் அமைக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.