இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில் இன்று (புதன்கிழமை) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து குவெட்டா போலீஸ் தரப்பில், “பாதுகாப்புப் படையினரை அழைத்து வந்த வாகனத்தை குறிவைத்து தான் இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. அந்த வாகனத்தில் போலியோ தடுப்பு மருந்துகள் இருந்தன. இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் பேசும்போது, “ இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்” என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பு நாடு முழுவதும் தாக்குதல் நடத்தப்படும் என திங்கட்கிழமை மிரட்டல் விடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.