மதுரை: மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் வழித்தடத்தை மாற்றியமைத்து குற்றாலம் உள்பட பல்வேறு இடங்களில் செயற்கையான அருவிகளை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, குமரி மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு ஆய்வு நடத்தி செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்களுக்கு சீல் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீர் வழித்தடத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மற்றும் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் நில நிர்வாக ஆணையர், தலைமை வனக் காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ”நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்று உடனடியாக குழு அமைத்த தமிழக அரசின் நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டுகிறது. செயற்கை அருவிகள் ஏற்படுத்தியவர்கள் மற்றும் தனியார் ரிசார்ட்டுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை நாளை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.