கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று, பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக குரங்கம்மை, தக்காளி காய்ச்சல் போன்ற புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில், புதிதாக தட்டம்மை என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. கேரளா முழுவதும் வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு பறவை காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், தற்போது தட்டம்மை வைரஸ் அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய குழந்தைகளுக்கான மருத்துவ அகாடெமியின் மாநில தலைவரான டாக்டர் ஜோஸ் ஊசெப் கூறுகையில், கேரளாவில் மலப்புரம் மாவட்டம் அதிகளவில் தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 160 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த பாதிப்புகளால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டுமென்று, கேரள அரசும் வலியுறுத்தி உள்ளது. ஏனெனில் தட்டம்மை குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.
இதேபோன்று மத்திய சுகாதார அமைச்சகமும், பிறந்து 9 மாதம் முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூடுதல் தடுப்பூசிகளை செலுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் பரிசீலனை மேற்கொள்ளும்படி இன்று கேட்டு கொண்டுள்ளது.
இந்த தட்டம்மையானது, 6 மாதம் முதல் 3 வயது உடையோர் இடையே பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனினும், பருவ வயதினர் மற்றும் முதியவர்களிடமும் கூட இதன் பாதிப்பு காணப்படும். சமீபத்தில், கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டமை பாதிப்பு அதிகரித்த சூழலில் ஆய்வு பணி மேற்கொள்ள மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 717 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது. மும்பையில் 303 ஆக உள்ளது. மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். இவற்றில் மும்பையில் இறப்பு எண்ணிக்கை 10 ஆக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. சந்தேக உயிரிழப்பு ஒன்று பதிவானது.