இஸ்லாமிய பெண்களுக்கு தனிக் கல்லூரி.. வக்ஃபு வாரியத் தலைவர் பேச்சுக்கு முதல்வர் விளக்கம்..!

இஸ்லாமிய பெண்களுக்காக தனிக் கல்லூரிகள் திறக்கும் திட்டம் இல்லை என்று, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துள்ள இஸ்லாமிய மாணவிகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பல்வேறு இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், “மாநிலத்தின் மங்களூரு, சிவமொக்கா, குடகு, சிக்கோடி, நிப்பானி, கலபுர்கி, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய பகுதிகளில் தலா ரூ.2.5 கோடி செலவில் இஸ்லாமிய பெண்களுக்காக 10 தனிக் கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று, வக்ஃபு வாரியத் தலைவர் மௌலானா ஷாப்தி சாதி தெரிவித்திருந்தார்.

இது, கர்நாடகத்தில் புதிய சர்ச்சைக்கு வித்திட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு தனிக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தின. அதையும் மீறி தொடங்கினால், போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சிவமொக்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கர்நாடக வக்ஃபு வாரியத் தலைவர், ‘முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். அது, அவருடைய தனிப்பட்ட கருத்து. அவ்வாறு முஸ்லிம் பெண்களுக்கு என்று தனியாக கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை.

ஹிஜாப் விவகாரத்திற்கு பிறகு கல்வி நிலையங்களுக்கு வரும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக சொல்வது உண்மைக்கு மாறானது. முஸ்லிம் மாணவிகளின் வருகை எப்போதும் போல் தான் உள்ளது. கர்நாடகத்தில் படிப்பறிவு அதிகரித்துள்ளது. சிறுபான்மையின பெண் குழந்தைகள் ஆர்வத்துடன் கல்வி கற்கிறார்கள். இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை” என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.