முகநூலில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேசுவதாக நினைத்து போலி கணக்கு வைத்திருந்த பெண்ணிடம் கர்நாடக இளைஞர் ரூ.40 லட்சம் இழந்துள்ளார்.
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் படங்களை ப்ரோபைல் படங்களாக வைத்து போலி அக்கவுண்டுகள் பல உள்ளன. இந்த போலி அக்கவுண்டுகளை உண்மை என்று நம்பி ஏமாறும் இளைஞர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் .
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது படத்தை ப்ரோபைல் போட்டோவாக வைத்து,கர்நாடகாவில் உள்ள ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார் . இந்த அக்கவுண்ட் மூலம் ஆண்களுக்கு நட்பு அழைப்பை அனுப்பியுள்ளார். இதனை வலையென அறியாமல், அம்மாநிலத்தின் விஜயாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமா என்பர் அழைப்பை ஏற்றுள்ளார்.
தனக்கு அழைப்பு வந்த கணக்கை பார்த்த பரசுராமாவுக்கு அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற விவரம் தெரியவில்லை. யாரோ ஒரு அழகான பெண் நம்முடன் பழக வேண்டும் என அழைப்பு கொடுத்ததாக நினைத்து இன்ப மயக்கத்தில் இருந்துள்ளார்.
கட்டுமானத்துறையில் பணியாற்றி கொண்டே, அரசு வேலைகளுக்கான தேர்வுக்கு படித்து வந்த பரசுராமா, கீர்த்தி சுரேஷ் புகைப்பட மோகத்தால் முகநூலில் மயங்கி விட்டார்.மஞ்சுளாவும் பரசுராமாவும் முகநூலில் சாட் செய்யத் தொடங்கி, வாட்ஸ் ஆப் மூலம் காதலை வளர்த்துள்ளனர்.
தான் கல்லூரி படிக்கும் இளம்பெண், எனது படிப்புக்கு உதவி செய்கிறீர்களா என்று மஞ்சுளா நாடகம் போட்டு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். இடையில் பரசுராமாவிடம் காதல் வார்த்தை பேசி மோகத்தை தூண்டியுள்ளார்.மனதுக்கு விருப்பமான பெண்ணுக்கு தானே பணம் தருகிறோம் என கேட்கும் போதெல்லாம் மஞ்சுளாவுக்கு பணம் அனுப்பியுள்ளார் பரசுராமா.
நேரில் பார்க்காத தனது காதல் தேவதைக்கு லட்சக் கணக்கில் பரசுராமா பணம் அனுப்பிய நிலையில், மஞ்சுளா விரித்த மற்றொரு வலையில் வசமாக சிக்கிகொண்டார். பரசுராமாவிடம் ஆசையாக பேசி அவர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை மஞ்சுளா ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த மஞ்சுளா, இந்த வீடியோவை வைத்து மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
ஆசையால் மோசம் போன பரசுராமா ஒரு கட்டத்தில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த சைபர் பிரிவு காவல்துறையினர் ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளாவை கைது செய்துள்ளனர். அப்போது தான் தன்னிடம் ஆசை வார்த்தை பேசியது கீர்த்தி சுரேஷ் அல்ல, மஞ்சுளா என்ற உண்மையை பரசுராமா தெரிந்துகொண்டார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மஞ்சுளாவின் கணவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது. பரசுராமாவிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் அளவிற்கு பணம் பறித்துள்ள மஞ்சுளா அதன் மூலம் 100 கிராம் தங்கம், ஹூண்டாய் கார், பைக் என பொருள்களை வாங்கி குவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மஞ்சுளாவிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறை, வேறு ஏதேனும் நபர்கள் இதுபோல ஏமார்ந்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது.
newstm.in