தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 6ம் தேதி மாலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள 4 அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த 5 உரிமம் பெற்ற மதுபான கடைகளை இன்று முதல் (டிசம்பர் 2ம் தேதி) 7 ம் தேதி வரை 6 நாட்கள் மூடி வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.