தி.மலை தீபத் திருவிழா | முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை: டிச.6 காலை 6 மணி முதல் அனுமதிச் சீட்டு வழங்கல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை பகுதி மீது ஏறி செல்ல 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வரும் 6-ம் தேதி காலை 6 மணிக்கு வழங்கப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, கார்த்திகைத் தீபத் திருநாளில், அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

டிசம்பர் 6-ம் தேதி காலை 6 மணி முதல் அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கும். முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்படும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.

பேய் கோபுரம் அருகே உள்ள வழியில் மட்டும் தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை பகுதியின் மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 6-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பிறகு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலை ஏறும் பக்தர்கள், தண்ணீர் பாட்டில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். காலி தண்ணீர் பாட்டிலை மலையில் இருந்து கீழே இறங்கும்போது, திரும்ப கொண்டு வர வேண்டும்.

கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு அனுமதி கிடையாது. மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். பிற இடங்களில் நெய்யை ஊற்றவும், தீபம் ஏற்றவும் கூடாது. இந்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று ஆட்சியர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.