மும்பையில் தென் கொரியாவை சேர்ந்த பெண் யூ-டியூபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவை சேர்ந்த பிரபல யூ-டியூபர் ஹியோஜியோங் பார்க், கடந்த மாதம் மும்பைக்கு வந்திருந்தார். இவர் மும்பையை சுற்றி பார்த்து பல வீடியோக்களை பதிவு செய்து உள்ளார். இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கர் பகுதியை வீடியோ எடுத்து யூ-டியூபில் நேரலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு சென்ற ஒரு இளைஞர் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினார். எனினும் பெண் அவரிடம் இருந்து நழுவி செல்ல முயன்றார். ஆனால் அவர் பெண்ணின் கையை பிடித்து இழுத்து அத்துமீறினார். ஒரு கட்டத்தில் அவர் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். எனினும் பெண் அந்த இளைஞரிடம் இருந்து தப்பித்து சென்றார்.
சில விநாடிகளில் மற்றொரு இளைஞருடன் இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர் பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு அழைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது.
வெளிநாட்டு பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக காவலர்கள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, பெண் யூ-டியூபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது சேக் (வயது19), முகமது நக்யூப் அன்சாரி (21) என்ற 2 இளைஞர்களை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் யூ-டியூபர் ஹியோஜியோங் பார்க் கூறியதாவது:- கர் பகுதியில் நான் வீடியோ எடுத்து கொண்டு இருந்தபோது, திடீரென 2 இளைஞர்கள் என்னை பார்த்து காதலிப்பதாக சொன்னார்கள். நான் அவர்களை கண்டு கொள்ளாமல் சென்றேன். அப்போது ஒருவர் எனது கையை பிடித்து தொல்லை கொடுத்தார். மேலும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வருமாறு வற்புறுத்தினார். நான் மறுத்தபோது, அவர் கையை எனது கழுத்தில் போட்டு கன்னத்தில் முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அங்கு இருந்து வர முயற்சி செய்தேன். அப்போது அந்த இளைஞர் என் கையை பிடித்து இழுத்துச் சென்றார். ஒருவழியாக அங்கு இருந்து தப்பித்து வந்தேன். ஆனால் அந்த இளைஞர்கள், என் ஓட்டல் அறை வரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் என்னிடம் செல்போன் எண்ணை கேட்டனர். அப்போது நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க பொய்யான செல்போன் எண்ணை கூறினேன். இதுபற்றி அறிந்து பலர் எனக்கு உதவி செய்ய முன்வந்தனர். இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காது என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
newstm.in