ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்துவருகின்றனர். உயிரிழப்பு மட்டுமின்றி தங்களது சேமிப்பு பணத்தை இழந்து செய்வதறியாது திகைத்துவருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு மகளிர் குழு மூலம் வழங்கப்படும் பணத்தையும் சில ஆண்கள் ஆன்லைன் ரம்மியில் போட்டு இழந்துவருகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது.
இதனையடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை பிறப்பித்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஏற்கனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் இதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் நேற்று ஆளுநரை நேரில் சந்தித்தார்.
இதற்கிடையே 6ஆம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி சேர்க்கப்பட்டிருந்தது. ஒருபக்கம் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இருக்கும்போது மறுபக்கம் பாடப்புத்தகத்தில் அந்த விளையாட்டு குறித்த பாடப்பகுதி இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது.
மேலும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உடனடியாக அதனை பாடப்புத்தக்கத்திலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கையும் வைத்தனர். அதனடிப்படையில் தற்போது சர்ச்சைக்குரிய ரம்மி விளையாட்டு பாடப்பகுதி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து முழுமையாக நீக்கப்படுமென்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்மி விளையாட்டு பாடப்பகுதி இந்த கல்வி ஆண்டில்தான் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.