உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் அக்னிகோத்ரி (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் நிச்சயித்தப்படி திருமணம் முடிந்து, வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, திருமண மண்டபம் கோலாகலமாக இருந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கிய நிலையில் வழக்கமான சம்பிரதாயங்கள் அங்கு அரங்கேறியுள்ளன.
மணமகளுக்கு மாலையிட்ட மணமகன் விவேக் அக்னிகோத்ரி, ஆனந்தத்தை வெளிப்படுத்த மணமகளை முத்தமிட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மணமகள் அதிர்ச்சி அடைந்தார். ஊரார், உறவினர்கள், நண்பர்கள் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மணமகன் தனக்கு முத்தமிட்டதை, அவமானமாக நினைத்த அந்த மணப்பெண், மணமகனை கண்டித்துள்ளார். அதன் பின்னும் ஆவேசம் அடங்காமல், வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார். இதை இருவீட்டாரும் விரும்பாத நிலையில், மணமகள் வீட்டார், அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் அந்த பெண், எந்த சமாதான வார்த்தையையும் ஏற்கவில்லை. இத்தனை பேருக்கு முன்னால் எனக்கு முத்தம் கொடுக்கிறார் என்றால், அவரின் நடத்தை சந்தேகத்திற்கு உரியது என்று குற்றம் சாட்டிய அந்த பெண், திருமணத்தை நிறுத்தினார். மேலும் தனக்கு முத்தமிட்ட மணமகன் மீது போலீசாரிடம் புகாரும் அளித்தார்.
வித்தியாசமான இந்த புகாரை கண்டு அதிர்ச்சிஅடைந்த போலீசார், மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண் போலீசாரின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் போலீசாரிடம் அவர் சில வாக்குமூலத்தை முன்வைத்தார்.
“நாங்கள் மேடையில் இருந்த போது மணமகன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அவரை பலமுறை தடுத்தேன். இந்த நேரத்தில் தான், அவர் திடீரென முத்தமிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்ததுடன், அவமானத்தை சந்தித்தேன். என் சுயமரியாதையை பற்றி அவர் கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் தவறாக நடந்து கொண்டார். எதிர்காலத்தில் அவர் இன்னும் மோசமாக நடந்து கொள்ளலாம். எனக்கு பயமாக இருக்கிறது. எனவே அவருடன் வாழ விருப்பமில்லை என்று முடிவு செய்துள்ளேன்” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மணமகளின் தாயார் கூறுகையில், “தனது நண்பர்கள் தூண்டுதலில் என் மருமகன் இவ்வாறு நடந்திருக்கிறார். என் மகள் அவருடன் செல்ல விரும்பவில்லை. நாங்கள் பலமுறை சமாதானம் செய்தும், அவள் அதை ஏற்கவில்லை. எனவே சிறிது நாட்களுக்கு இந்த பிரச்னையை ஒத்தி வைத்துவிட்டு, பின்னர் நல்ல முடிவு எடுக்கலாம் என நினைக்கிறோம்” என்று கூறினார்.
“மணமகளுடன் பந்தயம் கட்டியதாகவுமு், அதன் அடிப்படையில் தான் அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக” கூறியுள்ள மணமகன், ‘அனைவர் முன்னிலையிலும் தனக்கு முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், முத்தமிடவில்லை என்றால், ரூ.3 ஆயிரம் தர வேண்டும்’ என்றும் மணப்பெண் பந்தயம் கட்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், மணமகனின் இந்த விளக்கத்தை மணப்பெண் ஏற்கவில்லை. அவர் பொய் சொல்வதாக கூறியுள்ளார்.