இந்திய பெருங்கடலில் சீன உளவு கப்பல் – உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கடற்படைத் தளபதி தகவல்

புதுடெல்லி: இந்தியப் பெருங்கடலில் சீன உளவு கப்பல் காணப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தியப் பெருங்கடலில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்தியப் பெருங்கடலில் ஏராளமான சீன கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 4-6 சீன போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஆராய்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய பெருங்கடலில் ஏராளமான மீன்பிடி கப்பல்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு நிகழும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

வழக்கத்திற்கு மாறாக வேறு சில நாடுகளின் செயல்பாடுகளும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல், மிகப் பெரிய வர்த்தக பகுதி என்பதையும், வர்த்தகப் பரிமாற்றங்கள் நிகழும் பகுதி என்பதையும் நாங்கள் அறிவோம். அதேநேரத்தில் இந்திய கடல் எல்லையை இந்திய நலன்களுக்காக பாதுகாக்க வேண்டியது எங்கள் பணி. நாங்கள் அதை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக இருக்கிறது. இந்திய கடற்படையின் தயார் நிலை என்பது நம்பகத்தன்மை மிக்கது; சாதிக்கவல்லது.

தற்சார்பு இந்தியா எனும் கொள்கையின் அடிப்படையில் இந்திய கடற்படைக்குத் தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் நமது பாதுகாப்புக்கு பிற நாடுகளை சார்ந்திருக்கக் கூடாது என அரசு கூறி இருக்கிறது. அரசின் தெளிவான வழிகாட்டலின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படை 100 சதவீதம் தற்சார்பு கடற்படையாக மாறிவிடும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.