புதுடில்லி: எனது கருத்தை பாஜ., தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது. நான் எந்த ஒரு தனிமனிதர் மீதும் கருத்து தெரிவிப்பதில்லை என காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
ஆமதாபாத்தில் பெஹ்ரம்புராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது: மாநகராட்சி தேர்தலிலும் மோடியின் முகத்தை தான் பார்க்கிறோம். எம்எல்ஏ., தேர்தலாக இருந்தாலும், எம்.பி., தேர்தலாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் மோடியின் முகம் தான் உள்ளது. ராவணன் போல், உங்களுக்கு 100 தலைகள் உள்ளதா? எனக் கூறியிருந்தார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராவணன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக, பா.ஜ., நிர்வாகி அமித் மால்வியா, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்ட பாஜ., வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் கார்கேவின் கருத்துக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து காங்., தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், எனது கருத்தை பாஜ., தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது. நான் எந்த ஒரு தனிமனிதர் மீதும் கருத்து தெரிவிப்பதில்லை.

நாட்டில் வளர்ச்சி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்னைகள் குறித்து பாஜ., வை விமர்சித்தேன். காங்., அரசியல் எந்த ஒரு நபருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் செயல்திறன் அரசியலை நம்புகிறோம். பாஜ., ஆட்சி ஜனநாயக உணர்வைக் கொண்டிருக்கவில்லை.
பாஜ., அரசியல் எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை யாரோ ஒருவரின் விருப்பத்தின் பேரில் காங்கிரஸின் வாக்குகளை குறைக்க ஆம் ஆத்மி முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement