`முதல்வரின் முகவரி துறை' செயல்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: ஓராண்டில் 36 லட்சம் மனுக்கள்

சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில்அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பது `உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் அளித்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த துறைகள் மூலம் தீர்வு காணப்பட்டன.

இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் உதவி மையம், முதல்வரின் தனிப் பிரிவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர் மேலாண்மை அமைப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக `முதல்வரின் முகவரி துறை’ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.

இந்த துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் செயல்பட்டு வருகிறார். இணையதளம் வாயிலாக மனுக்கள் அளித்தல், மனுக்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப் பிரிவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மனு அளித்து வந்தனர். தற்போது அந்தந்த மாவட்டங்களிலேயே மனுக்களை அளித்து, தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டு, அதன்படி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இதுவரை 35,97,817 மனுக்கள் பெறப்பட்டு, 33,82,463 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல்வரின் முகவரித் திட்ட செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் த.உதயசந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்கள், முதல்வரின் முகவரித் துறை அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுவரை தீர்வு காணப்படாத, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கை, பொதுமக்களின் கருத்துகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மனுக்கள் மீது துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சிறப்பு அதிகாரி இதைக் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.