வயலில்களுக்கு படையெடுக்கும் யானைகள்… பலநுாறு ஏக்கரில் பயிர்கள் சேதம்! வனத்துறை நிவாரணம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 2,024 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மேல் வனப்பகுதியுள்ளது. இதில், பெரும்பாலான காப்புக்காடு பகுதிகள், மேலகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூர், ஜவளகிரி, அஞ்செட்டி சுற்றுப்பகுதிகளில் உள்ளன. இப்பகுதிகள், கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வனஉயிரின சரணாலயத்துக்கு மிக அருகில் உள்ளன.

ஆண்டு முழுதும், தமிழக – கர்நாடக வன எல்லைப் பகுதிகளுக்குள், 400 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் இந்த யானைகள் உணவு, நீர் தேடி பயணித்து வாழ்ந்து வருகின்றன. ஆண்டு முழுவதிலும் இப்பகுதிகளில், பெருங்கூட்டமாக யானைகள் வந்து செல்வதும், விளைநிலங்களுக்குள் புகுந்து பல நுாறு ஏக்கரில் பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.

விளைநிலங்களில் யானைக்கூட்டம்.

258 யானைகள் முகாம்!

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக, ராயக்கோட்டை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, கிருஷ்ணகிரி, அஞ்செட்டி மற்றும் உரிகம் கிராமப் பகுதிகள் அருகே வனத்துறை கணக்கெடுப்பின் படி, 258 -க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக இப்பகுதிகளில், வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களில், வாழை, தென்னை, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு, விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

வாழை சேதம்

இதனால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்து வருவதுடன், வன எல்லையோர கிராம மக்கள் அச்சத்துடனே உள்ளனர். பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து, இழப்பீடு பெற போராடி வருகின்றனர்.

நேற்று இரவு, 11 மணி முதல் இன்று அதிகாலை, 4 மணி வரையில், உரிகம், ராயக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனத்தினுள் விரட்டும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஓராண்டில் ஒரு கோடி நிவாரணம்!

இது குறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனியிடம் பேசினோம், ‘‘ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மழைக்காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்கள் விளைவிப்பதால் விளைநிலங்களும், வனமும் பசுமையாக இருக்கும்.

கவலையில் விவசாயிகள்.

இந்த பருவத்தில், கர்நாடக பகுதிகளை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிக்கு யானைகள் கூட்டமாக வருகின்றன. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் துவக்கத்தில், யானைகள் மீண்டும் கர்நாடக பகுதிகளுக்குச் செல்கின்றன. தற்போது, பயிர்களால் கவர்ந்து இழுக்கப்பட்டு யானைகள் பெருங்கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

மாற்றுப்பயிர் சாகுபடி!

ராகி, வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்ட பயிர்களால் எளிதாக கவரப்படும் யானைகள், விளைநிலங்களைத்தேடி படையெடுக்கின்றன. இதற்கு மாற்றாக மரப்பயிர்கள் சாகுபடி செய்ய வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு நாற்றுகள் வழங்குகிறோம். வனத்துறை, தோட்டக்கலைத்துறை இணைந்து யானைகளால் கவரப்படாத பயிர்கள் சாகுபடி செய்ய ஆலோசனைகள் வழங்குகிறோம். ஆனாலும், விவசாயிகள் இந்த முறைகளை பின்பற்றாமல் விடுவதால், யானைகள் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.

தென்னை மரங்கள் சேதம்.

இந்த ஓராண்டில், 720 விவசாயிகளுக்கு, 1.1 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு வழங்கியுள்ளோம். பயிர் சேதமடையும் பகுதிகளில், விவசாயிகளிடம் விண்ணப்பம் பெற்று நிவாரணம் வழங்குகிறோம். தற்போது, மாவட்டம் முழுதும், 200 வனத்துறை பணியாளர்கள், 24 மணி நேரமும் கண்காணித்து யானைகளை வனத்தினுள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கும் இரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்,’’ என விரிவான விளக்கமளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.