வாஷிங்டன்: என்னுள் ஒரு பகுதி இந்தியா. நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அப்போதெல்லாம் என்னுடன் இந்தியாவையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூகுள், நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்தியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு அவரால் வர இயலவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம்,சுந்தர் பிச்சைக்கு, பத்ம பூஷண் விருது நேற்று முன்தினம் வழங்கிகவுரவிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து, இந்த விருதை, சுந்தர் பிச்சைக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்திய – அமெரிக்கரான சுந்தர் பிச்சை, வணிகம் மற்றும் தொழில்துறை பிரிவின் கீழ் 2022-ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற விழாவில் அவர் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியா எனக்கு அளித்த இந்த மிகப்பெரிய கவுரத்துக்காக இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்னை வடிவமைத்த இந்திய நாட்டினால் இந்த வகையில் கவுரவிக்கப்படுவது விவரிக்க முடியாத அர்த்தங்களை ஏற்படுத்துகிறது. என்னுள் ஒரு பகுதி இந்தியா.நான் எங்கெங்குச் சென்றாலும் அப்போதெல்லாம் அங்கு என்னுடன் இந்தியா வரும்.
கற்றலையும் அறிவையும் நேசித்த குடும்பத்தில் வளர்ந்த நான்அதிர்ஷ்டசாலி. எனக்காக, எனது பெற்றோர் அதிக அளவில் தியாகம்செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.