எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்பதில் குறவரை நீக்க வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் (எ) முத்துமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழ்நாட்டில் எஸ்சி-எஸ்டி பட்டியலில் உள்ளனர். 1951ல் எம்பிசி பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆனால், நரிக்குறவர்கள் சமயம், பழக்கவழக்கம், திருமண முறைகள் வேறுபாடு கொண்டது. இவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. எனவே, எங்களது குறவர் என்ற பெயரை எம்பிசி பட்டியலில் உள்ள நரிக்குறவர் என்ற பெயரில் இருந்து நீக்க வேண்டும். குறவர், குறவன் என்பது எங்களின் பெயர். இதனால், எங்களது கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்து, ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.