அகமதாபாத்: ‘‘சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்திஜியின் கனவை நிறைவேற்றும் நேரம் வந்து விட்டது’’ என குஜராத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
குஜராத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அகமதாபாத்தின் தோல்கா என்ற இடத்தில் நேற்று நடந்த பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 1947-ம் ஆண்டில் நாம் சுதந்திரம் பெற்ற பின்பு, பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் காந்திஜியை சந்திக்க சென்றனர். அப்போது, காங்கிரஸ் கட்சி அடுத்த எவ்வாறு செயல்பட வேண்டும் என காந்திஜியிடம் ஆலோசனை கேட்டனர். இதற்கு பதில் அளித்த காந்திஜி, ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. இனிமேல் காங்கிரஸ் கட்சி தேவையில்லை. இது கலைக்கப்பட வேண்டும்’’ என்றார். அவரது கனவை நிறைவேற்ற வேண்டிய நேரம் இதுதான்.
உத்தர பிரதேசத்தில் நடந்தசட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டும் வென்றது. ஆம் ஆத்மி கட்சி எங்கும் வெற்றி பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.