டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 250 வார்டுகளின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதவு காலை 8 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வாக்களிக்க டெல்லி முழுவதும் 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ சேவைகள், அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணி முதல், அனைத்து வழித்தடங்களிலும் சேவையைத் தொடங்கியுள்ளது. காலை 6 மணி வரை, அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன்பின்னர், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி தேர்தலில் மொத்தம் 1,45,05,322 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், 229 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2,04,301 லட்சம் பேர் 80 முதல் 100 வயதை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 250 வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது தவிர சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

தேர்தலையொட்டி 40,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தையடுத்து, இந்த தேர்தல் நடைபெறும் இந்த தேர்தலில், 493 பகுதிகளில் உள்ள 3,360 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சியின் ஆட்சியே மாறிமாறி நடைபெற்று வந்தாலும், மாநகராட்சியை பொறுத்தமட்டில் பாஜகவே வலுவாக உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு 272 வார்டுகளில் 181 வார்டுகளை பாஜக கைப்பற்றியிருந்தது. ஆம் ஆத்மி 48 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 27 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. இந்த முறை மீண்டும் அதனை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல், டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பிற கட்சிகள், சுயேச்சைகள் போட்டியிட்டாலும், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டியே டெல்லியில் நிலவி வருகிறது.

ஒன்றுப்பட்ட டெல்லி மாநகராட்சி டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சிகளாக 2011-2022 வரை பிரிக்கப்படிருந்தது. கடந்த மே மாதம் இவை அனைத்தும் மீண்டும் ஒருங்கிணைப்பட்டு டெல்லி மாநகராட்சியாக 250 வார்டுகளுடன் மாற்றப்பட்டது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 7ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.