பாலியல் வெறியில் பலர் சிறுமிகள் மீது வன்கொடுமையை நிகழ்த்துகிறார்கள். அந்த வன்கொடுமை ‘காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது’ என்ற வயதில் இருப்பவர்களும் நிகழ்த்துவது உண்டு. சிறு வயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை குறையும் என்று பலர் எதிர்பார்த்திருக்க நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி சிறு வயதினர் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். இந்தச் சூழலில் போக்சோவில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இதன்படி திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய வேண்டும்.
முக்கிய வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.