மும்பை: நாட்டின் மூன்றாவது அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை குஜராத் காந்தி நகர் – மும்பை வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த வழித்தடத்தில் கால்நடை கள் வந்தே பாரத் ரயிலில் அடிபடும் சம்பவம் இதுவரை 4 முறை நடந்துள்ளது. இந்த ரயிலின் முன்பகுதி ஏரோடைனமிக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால், அடிபடும் கால்நடைகள் ரயிலுக்குஅடியில் சிக்குவது தடுக்கப்படுகிறது. ஆனால் ரயில் முன்பகுதி பலத்த சேதமடைகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் வேலி அமைக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து மேற்கு ரயில்வேபொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது: அகமதாபாத் – மும்பை வழித்தடத்தில் கால்நடைகள் ரயிலில் அடிபடும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால், இந்த வழித்தடத்தில் சுமார் 620 கி.மீ தூரத்துக்கு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு ரூ.264 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.