கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பிற்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கட்டாய மத மாற்றம் ஒரு “தீவிரமான பிரச்சினை” என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. “மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் மற்றும் பணப் பலன்கள் மூலம் ஏமாற்றுதல்” போன்ற மோசடியான மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. முறையற்ற வழிகளில் மத மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த தகவல்களை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து வருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான தகவல்களை அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். “நாங்கள் மாநிலங்களில் இருந்து தகவல்களை சேகரிக்கிறோம். எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்,” என்று மேத்தா கூறினார். நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் ஒருவர் மதம் மாறுகிறாரா, அல்லது ஆசை காட்டியும்,  அச்சுறுத்துவதாலும் மதம் மாறுகிறாரா என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் என்றார்.

கட்டாய மத மாற்றம் மிகவும் தீவிரமான விஷயம் என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த வழக்கின் மீதான விசாரணையில்,  கட்டாய மத மாற்றத்தை “மிகவும் தீவிரமான” பிரச்சினையாகக் கருதிய உச்ச நீதிமன்றம், கட்டாய மதமாற்றத்தை தடுப்பது பற்றி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  கட்டாய மத மாற்றத்தை “மிகவும் தீவிரமான” பிரச்சினையாகக் கருதிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசை தலையிட்டு, இந்த நடைமுறையை கட்டுப்படுத்த நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. கட்டாய மத மாற்றங்களை நிறுத்தாவிட்டால் “மிகவும் கடினமான சூழ்நிலை” உருவாகும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. 

தொண்டு நிறுவனத்தின் நோக்கம் என்றால் சேவை தான் என்றால் நல்லது, அது வரவேற்கத்தக்கது ஆனால் அதன் நோக்கம் மத மாற்றம் என்றால் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.மத மாற்றம் நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும், அவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என்று நீதிமன்ற பிரிவு குறிப்பிட்டது. இந்த வழக்கை டிசம்பர் 12-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

கட்டாய மத மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அது குடிமக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேலும் “மிகவும் தீவிரமான” பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசு தலையிட்டு நேர்மையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.