திருவண்ணாமலை: கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா நாளை (6-ம் தேதி) நடைபெற உள்ளன. மூலவர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து தங்க கொடி மரம் முன்பு அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்க, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளன.

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலை அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மலர்கள் வரழைக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி முன்பு 2-ம் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்கள், கரும்பு மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டன.

இதேபோல், தங்க கொடி மரம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் வாழை மரம் மற்றும் தென்னங்கீற்று கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. மேலும் முகப்பு பகுதியில் சிவலிங்கம் மற்றும் 2 நந்திகளை தத்ரூபமாக வடிவமைத்து மலர்களைக் கொண்டு தோரணம் கட்டப்பட்டிருந்தது.


இதேபோல், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் மகா தீப தரிசன மண்டபமும் தென்னங்கீற்றுகளை கொண்டு பின்னப்பட்ட தட்டுகள் மற்றும் தோரணங்கள் மூலமாக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு உள்ள மண்டபமும் மலர்களால் அலங்கரித்து ரம்மியமாக காட்சி கொடுக்கிறது.


மேலும் கோயில் உள்ளே இருக்கும் சம்பந்த விநாயகர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளும் வாழை மரங்கள், மலர்கள் மற்றும் தென்னங்கீற்றுகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிளிகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் முன்பு வாழைமரங்கள் மற்றும் தென்னங்கீற்றுகள் மற்றும் இளநீர் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.