பஞ்சாபில் போதைப் பொருள் மற்றும் கள்ள சாராய பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. பஞ்சாப் எல்லையில் அதிக அளவில் புழங்கும் போதைப்பொருள் மற்றும் மது இளைஞர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் நீதிபதி சி.டி.ரவி குமார் ஆகியோர் பெஞ்சில், போதைப்பொருள் மற்றும் மதுவின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் பஞ்சாப் ஒரு மதுபான ஆலையாக இருக்கிறது என்பது தான் இன்றைய நிலைமை. எந்த அண்டை நாடாவது இந்தியாவை அழிக்க நினைத்தால், இளைஞர்களை இந்த வலையில் சிக்க வைப்பது அவர்களுக்கு மிகவும் எளிதானது. சட்டவிரோத போதை பொருள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், உள்ளூர் காவல்துறையின் பொறுப்பை நிர்ணயிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஆண்டுகளில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள்!
2 ஆண்டுகளில் 34,767 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எப்ஐஆர் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கள்ள சாராய கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாப் அரசின் பதில்
பஞ்சாப் அரசு சார்பில் வழக்கறிஞர் அஜித் குமார் சின்ஹா நீதிமன்றத்தில் இது குறித்து கூறூகையில், சட்டவிரோத மதுபான ஆலைகளுக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கை தொடர்கிறது என்றும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 10 முதல் 20 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், பல்வேறு எஃப்ஐஆர்களை இணைத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், மாநில எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
பஞ்சாப் அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து, கள்ள சாராயம் கடத்தலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தொகையை மது மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.