புதுச்சேரி: “விமர்சித்தால் நடவடிக்கை என்ற கூற்றை ஆளுநர் தமிழிசை திரும்பப் பெற வேண்டும். ஆளுநர்களுக்கான எல்லையை உணர்ந்து அவர் செயல்பட வேண்டும்” என புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கூறியுள்ளார்.
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பாஜக அரசு பேச்சுரிமை, கருத்துரிமையை நசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை அரசு விழா ஒன்றில் பேசும்போது, விமர்சித்தால் இனி விமர்சிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கும் என்று மிரட்டியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசியல் கட்சி தலைவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.
மக்களை சந்தித்து அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு அந்த பக்குவம் இருக்கும். அவ்வாறு வராதவர்களுக்கு அந்த பக்குவம் இருக்காது என்பதை ஆளுநர் தனது பேச்சு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதுபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அந்தப் பக்குவம் இருக்கும் என்பதையும் அவரே அந்த விழா பேச்சில் தெரிவித்துள்ளார். அதாவது பிரதமர் மோடியிடம் சுறுசுறுப்புக்கான காரணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு விமர்சனங்களை சாப்பிடுவதால்தான் நான் சுறுசுறுப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே பிரதமர் மோடி கூறியபடி அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள ஆளுநர் தமிழிசை பழக வேண்டும். அதன்மூலம் மட்டுமே நாம் செல்லும் பாதை எவ்வளவு தவறானது என்பதையும் உணர முடியும். அதற்கு மாறாக என்னை (ஆளுநரை) கடுமையாக விமர்சித்தால் இனி விமர்சிக்கவே முடியாத சூழல் ஏற்படும் என்றெல்லாம் மிரட்டுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜனநாயகத்திற்கும், பேச்சுரிமைக்கும் எதிரானது. மேலும் மோசமாக விமர்சனம் செய்பவர்களை மேலும் மோசமாக விமர்சனம் செய்யவே தூண்டும்.
எனவே, அரசியல்வாதிகளுக்கு எதிலும் நிதானம் தேவை என்பதை ஆளுநர் தமிழிசை உணர்ந்து விழாக்களில் பேச வேண்டும். மாறாக அடக்குமுறையை பிரயோகிக்க நினைத்தால் அது எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்பதையும் ஆளுநருக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன். மேலும் விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை ஆளுநர் தமிழிசை திரும்பப்பெற வேண்டும். ஆளுநர் எல்லாம் தகுதியுடன் பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு தகுதி என்பது மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று வருவதுதான். ஆனால், ஆளுநர் யாரும் அதுபோல் வெற்றி பெற்று பொறுப்புக்கும் வரவில்லை. எனவே ஆளுநர்களுக்கான எல்லையை உணர்ந்தும் ஆளுநர்கள் செயல்பட வேண்டும்” என்று சிவா கூறியுள்ளார்.