தமிழக பத்திர பதிவுத்துறையில் சொத்துக்கள் விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவுக்கு வரும் சொத்தில் முன் ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் சொத்தில் தாய் பத்திரத்தை சார்பதிவாளர் சரி பார்ப்பதுடன் அதற்குரிய சில பக்கங்களை நகலெடுத்து புதிய ஆவணத்துடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சொத்தில் உண்மை தன்மை ஆய்வு செய்ய வழக்கமாக 30 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்று ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் சமீப ஆண்டுகளில் சில சொத்துக்கள் எவ்வித விற்பனை பரிமாற்றமும் நடக்காத நிலையில் 30 ஆண்டு வில்லங்கம் சான்று போதுமானதாக இல்லை என தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக 50 முதல் 60 ஆண்டுகளுக்கான வில்லங்கம் விவரங்கள் திரட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் சார்பதிவாளர்களும் பொதுமக்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே பத்திரப்பதிவின் போது எத்தனை ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு கால வரையறை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.