அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா கேரள எல்லையில் இருக்கும் கண்ணகி கோயில்?

தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள `மங்கலதேவி கண்ணகி கோயில்’, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
தமிழகத்தின் மேகமலை புலிகள் காப்பகத்தின் வண்ணாத்திப்பாறை மலை மற்றும் கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் மங்கலதேவி ஆகிய இரு மாநில மலைகள் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தனது கணவன் கோவலனை கள்வன் எனக் கூறி பாண்டிய மன்னன் கொலை செய்ததால் கோபமுற்ற கண்ணகி மதுரையை எரித்த கையோடு கால்நடையாக இந்த மங்கலதேவிக்கு வந்து சென்றதாக கூறுகிறது வரலாறு.
image
கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த கண்ணகி கோவில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான தொல்லியல்துறை ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக கேரள எல்லையில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானது இந்த கண்ணகி கோவில். கண்ணகி கோவில் முகப்பு தமிழகத்திற்கு என்றும், பின்புறம் கேரளாவிற்கு என்றும் சர்ச்சைகள் இருந்தன. ஆனாலும் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று நடக்கும் “சித்திரை முழு நிலவு விழா”வில் இரு மாநில கண்ணகி பக்தர்களும் ஒரு சேர இணைந்து வழிபட்டு வருவதால் காலப்போக்கில் எல்லை பிரச்னை மறைந்தது.
image
அந்தவகையில் இரு மாநில மக்களும் ஒருமித்து வணங்கும் கோயிலாக இன்று உருமாறி இருக்கிறது இந்த கண்ணகி கோவில். இங்கு வருடம் ஒரு முறை நடக்கும் சித்திரை முழு நிலவு விழாவை தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கண்ணகி பெயரில் இயங்கும் அறக்கட்டளைகள் நடத்தி வருகின்றன. இப்படியான சூழலில்தான் தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலை, முழுமையாக தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அதன் முதற்கட்டமாக ஆட்சேபனை இருந்தால் அதை தெரிவிக்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கற்றறிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
image
கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்ணகி கோவில் விழாவை அரசு விழாவாக நடந்த வேண்டும் என பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது இந்த முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
image
இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தமிழக எல்லையில் வண்ணாத்திப் பாறை மலையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆட்சேபனை ஏதும் இருந்தால் தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கீழ் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் தங்கள் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-ரமேஷ் கண்ணன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.