வெளிநாடுகளை சேர்ந்த சிறுமிகள் உட்பட 14,190 பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்: போதைக்கு அடிமையாக்கியதும் அம்பலம்; தெலங்கானாவில் 17 பேர் அதிரடி கைது

திருமலை: இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சிறுமிகள் உட்பட 14 ஆயிரம் பெண்களை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 17 பேர் கும்பலை தெலங்கானாவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், கச்சிபவுலியில் உள்ள சைபராபாத் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது: சைபராபாத் போலீசார் மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் நகரில் நடக்கும் பாலியல் தொழில் மற்றும் ஆள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆள்கடத்தல் மற்றும் பாலியல் தொழில் சம்பந்தமாக பேகம்பேட்டை பிரகாஷ்நகரை சேர்ந்த சல்மான் என்கிற விவேக்(23), சன்சிட்டியை சேர்ந்த இர்பான் என்கிற விகாஸ்(36) ஆகியோர் கடந்த மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில்  முக்கிய குற்றவாளிகளான அர்னவ், சமீர், ஹர்பிந்தர் கவுர் ஆகியோர் கடந்த மாதம் 18ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐதராபாத் மசாப் டேங்கை சேர்ந்தவர் முகமது அதீம் என்கிற அர்னாப்(31). டோலிச்சவுகியை சேர்ந்தவர் முகமது சமீர்(27). இவர்கள் கடந்த 2019ம் ஆண்டில் பாலியல் தொழிலை தொடங்கியுள்ளனர்.

மேலும், 15 பேருடன் சேர்ந்து பாலியல் கும்பலை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக, பல்வேறு மாநிலங்களில் புரோக்கர்களை நியமித்து கமிஷன் கொடுத்து சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இவர்கள் வறுமையில் வாடும் சிறுமிகள் மற்றும் பெண்களை குறி வைத்தும், வேலை தேடி அலையும் பெண்களுக்கு சொகுசு வாழ்க்கை என ஆசை வார்த்தை கூறியும் போதை மருந்துக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும், போதை மருந்து விற்பனையும் செய்து வந்துள்ளனர்.

இதில் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த சிறுமிகளும் உள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் புரோக்கர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இணையதளங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் வெளியிடுவார்கள். டெல்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கால் சென்டர்களை நடத்தியுள்ளனர். அந்த போட்டோ, வீடியோக்களை பார்த்து வாடிக்கையாளர்கள் போன் செய்தால் அனைத்தையும் பேசி பெண்களுக்கான விமான டிக்கெட், ஓட்டல் ரூம் புக் செய்து அனுப்பி வந்துள்ளனர். பெறப்பட்ட பணத்தில் 30 சதவீதம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுமிகளுடன் வெளிநாடுகளை சேர்ந்த சிறுமிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் ஐதராபாத் அழைத்து வந்து  இவர்களுக்கு போலி ஆதார் அட்டைகளை உருவாக்கி தங்க வைத்துள்ளனர். பாதித்த பெண்களில் 50 சதவீதம் பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். 15 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, 7 சதவீதம் பேர் டெல்லி, 5 சதவீதம் பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், 3 சதவீதம் பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பிடிபட்ட பெண்களுக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது வழக்கம். இதுதொடர்பாக, மொத்தம் 17 பேர் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள்  மீது 39 வழக்குகள் உள்ளன. அவர்களிடம் இருந்து ரூ.95 ஆயிரம் ரொக்கம், 34 செல்போன்கள், 3 கார்கள், ஒரு லேப்டாப், ஏடிஎம் கார்டுகள், 2.5 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலிடம் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14,190 பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.