Delhi MCD Election 2022: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில், ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில், வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்பூர் மஜ்ரா வார்டு A கவுன்சிலராக பாபி என்ற ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது சரித்திரம் படைக்கும் ஒரு விஷயம் என்று பல தரப்பினரும் வரவேற்கின்றனர். “எனது தொகுதியில் உள்ள மக்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாய்ப்பளித்துள்ளனர் என்று கூறுகிறார்கள், ஆனால் இந்த முறை அவர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர்” என்று திருநங்கை போபி கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியால் (AAP ) டெல்லி மாநகராட்சி தேர்தலில் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்பூர் மஜ்ரா வார்டு ஏ தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பாபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
2017 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மியின் சஞ்சீவ் குமார் வெற்றிப் பெற்ற தொகுதியில் இந்த முறை திருநங்கை போபி போட்டியிட்டார். 2017 MCD தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பாபி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சமூக சேவகர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் இந்த 38 வயது திருநங்கை.
திறந்தவெளி கழிவுநீர் சாக்கடையால் நிரம்பியுள்ளது, சுல்தான்பூர் மஜ்ரா பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பாபி கொடுத்த வாக்குறுதி என்ன தெரியுமா? “நான் வெற்றி பெற்றால், தூய்மை மற்றும் அழகுபடுத்துவதில் பணியாற்றுவதே எனது முதல் குறிக்கோள். சாலைகளிலும், பூங்காக்களிலும் ஏராளமான குப்பைகள், திறந்தவெளி சாக்கடைகள் உள்ளன. இப்பகுதியை அழகுபடுத்துவதுடன், குடியிருப்புவாசிகளுக்கு வசதியாக சாலைகளை சிறப்பாக அமைக்க விரும்புகிறேன்” என்பதே பாபியின் தேர்தல் வாக்குறுதி.
தூய்மைப்படுத்தும் துடைப்பத்தை சின்னமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் இந்த வேட்பாளர், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.