சாதித்த இளம் வீரர்:
போர்ச்சுக்கல் Vs சுவிட்சர்லாந்து இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் கொன்ஸாலோ ராமோஸ் எனும் 21 வயதே ஆன வீரர் ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார். உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டியில் பிரேசிலின் பீலேவிற்கு பிறகு ஹாட்ரிக் கோல்கள் அடித்த இளம் வீரர் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அப்செட்டில் ரொனால்டோ:
சர்வதேச அளவில் வெறும் 35 நிமிட அனுபவம் மட்டுமே கொண்ட ராமோஸூக்காகத்தான் நேற்றைய போட்டியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் ரொனால்டோ கொஞ்சம் அப்செட்டானது போல தெரிந்தது. 6-1 என போர்ச்சுக்கல் வென்ற பிறகு வீரர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ரொனால்டோ மட்டும் ஆராவாரமே இல்லாமல் ஒதுங்கி சென்றிருந்தார்.

வரலாற்று நாயகன்:
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி மொராக்கோ அணி முதல் முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. இந்தப் போட்டி பெனால்டி சூட் அவுட் வரை சென்றிருந்தது. அதில், மொராக்கோ நான்கு வாய்ப்புகளில் மூன்று கோல்களை போட்டு 3-0 என வென்றது. ஸ்பெயின் தங்களது 3 வாய்ப்புகளில் ஒன்றை கூட கோலாக்க முடியவில்லை. மொராக்கோவின் கீப்பர் யாசீன் போனோ அற்புதமாக ஸ்பெயினின் அத்தனை ஷாட்டையும் சேவ் செய்திருந்தார். முதலில் அடிக்கப்பட்ட ஒரு ஷாட் மட்டும் கோல் கம்பத்தில் பட்டிருந்தது. அதிலும் கூட யாசீன் சரியான திசையிலேயே பாய்ந்திருந்தார். மீதி இரண்டு வாய்ப்புகளுமே க்ளீன் சேவ்கள். மொராக்கோ அணியின் வரலாற்று நாயகனாக மாறியிருக்கிறார் யாசீன் போனோ!

மெஸ்ஸியின் ஜெர்சி:
ரவுண்ட் ஆஃப் 16 இல் ஆஸ்திரேலிய அணி அர்ஜெண்டினாவிடம் வீழ்ந்திருந்தது. இந்த போட்டி மெஸ்ஸிக்கு 1000 வது போட்டியாகும். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மெஸ்ஸியின் ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் டெவ்லின் அவரிடமிருந்து நினைவுப்பரிசாக வாங்கியிருக்கிறார். மெஸ்ஸி ஜெர்சியை கழட்டி டெவ்லினுக்கு கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 1986 இல் மரடோனா இங்கிலாந்து வீரர் ஒருவருக்கு ஜெர்சியை நினைவுப்பரிசாக கொடுத்தார். அந்த உலகக்கோப்பையை அர்ஜெண்டினா வென்றது. மரடோனா அன்பளிப்பாக அளித்த அந்த ஜெர்சி சமீபத்தில் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
Messi 1000th Game Matchworn heads to Edinburgh…
Hearts midfielder Cameron Devlin took for opportunity to swap shirts the moment Man of the Match duties finished.
Snooze you lose!! pic.twitter.com/Cvx8zczfcV
— They Think Kits All Over (@TheyThinkKits) December 4, 2022
பின்வாங்கிய போலந்து பிரதமர்:
போலந்து பிரதமர் மொரவியாஸ்கி போலந்து அணியின் கால்பந்து வீரர்களுக்கு போனஸ் வழங்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். போலந்து அணி உலகக்கோப்பைக்கு செல்லும் முன்பே போனஸ் வழங்குவோம் என உறுதியும் அளித்திருக்கிறார். ஆனால், இப்போது அதிலிருந்து பின் வாங்கியிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக போனஸ் வழங்குவதை தவிர்த்து அந்த பணத்தை கால்பந்தை ஊக்குவிப்பதற்காக செலவளிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்.