mandous cyclone update:புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிப்பு!

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் இது வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் எனவும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் விளைவாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும், கடற்பகுதியில் பலமான சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (டிசம்பர் 8) காலை மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி, மாண்டஸ் புயலானது நகர வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.தற்போதைய கணிப்பின்படி, மாண்டஸ் புயலானது புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று மாலை முதலே தமிழ்நாடு, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் கடலோரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பரில் உருவாகும் புயல்கள் கரையை கடக்கும் முன்பே வலுவிழந்துவிடும் என்பதே பெரும்பாலும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் மாண்டஸ் புயலால் பலத்த சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும், மழை மட்டுமே கொட்டித் தீர்க்கும் என்றும் வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை மாதம் போனால் கனமழை பெய்யாது என்றொரு வழக்குமொழி உண்டு. இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முடிவடைய இன்னும் கிட்டதட்ட 10 நாட்களே உள்ளன. கார்த்திகை மாத தொடக்கத்தில், அதாவது, வடதமிழகத்தில் பருவமழை உச்சத்தில் இருக்கும் நவம்பர் மாதத்தில் இந்த முறை போதுமான மழை பெய்யவில்லை. எனவே டிசம்பர் மாதத்திலாவது பருவமழை கொட்டித் தீர்க்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

1 ஆம் எண் எச்சரிக்கை:
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி வந்தடைந்தது பேரிடர் மீட்புக்குழுவினர். புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தயார் நிலை:
புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும், அனைத்து துறைகளையும் விழிப்புணர்வுடன் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும், 238 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.