ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் 2022: காங்கிரஸ் கனவு நொறுங்குமா? வரலாற்றை திருத்துமா பாஜக?

ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 35 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும். ஹிமாச்சல் தேர்தல் வரலாற்றை பொறுத்தவரை 1980க்கு பின்னர் பாஜக,
காங்கிரஸ்
என மாறி, மாறி ஆட்சியை பிடித்துள்ளன.

சரிவை நோக்கி காங்கிரஸ்

எனவே 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற நிலையில், 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அக்கட்சியே கனவாகவும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை மீட்டெடுக்கும் வகையில் அகில இந்திய தலைவர் மாற்றம், இந்திய ஒற்றுமை பயணம், பிரியங்கா காந்தி பிரச்சாரம் என பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சட்டமன்ற தேர்தல் வியூகம்

அதுமட்டுமின்றி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, முன்னாள் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாகவே வெளிவந்துள்ளன.

வரலாறு மாற்றி எழுதப்படுமா?

இதன் காரணமாக வரலாற்றை திருத்தி எழுதி பாஜக அரியணையில் அமருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தனது பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்படும் என்ற கனவு கோட்டை கட்ட தொடங்கிவிட்டார் ஜெய்ராம் தாகூர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலம் என்பதால் அக்கட்சியின் வெற்றி என்பது கவுரப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு

இதையொட்டி உத்தரப் பிரதேச முதல்வர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில தலைவர் சுரேஷ் காஷ்யப் கூறுகையில், பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பது கட்சிக்கு பெரிதும் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கிறோம்.

நட்சத்திர தொகுதிகள்

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களுக்காக பாஜக தீவிரமாக செயல்பட்டிருக்கிறது. அதற்கான பலன் இந்த தேர்தலில் கிடைக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டார். ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சேராஜ், சுஜன்பூர், நதுவன், போவன்டா சாஹிப், தியோக், காசும்ப்டி, சிம்லா கிராமப்புற பகுதி ஆகிய தொகுதிகள் முக்கியமானவையாக இருக்கின்றன.

2024 மக்களவை தேர்தல்

ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும். பிரதமர் மோடி இமேஜ் மேலும் உயரும். இது அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.