ஷிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் 32 இடங்களையும், பாஜக 32 இடங்களையும் வசப்படுத்தும் வகையில் வெற்றி / முன்னிலை நிலவரங்கள் உள்ளன. ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. பிற கட்சிகளும், சுயேட்சைகளும் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 35 இடங்களில் வெற்றி தேவை. ஆளும் பாஜக பின்னடவை சந்தித்துள்ள நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி, இதர கட்சிகள் – சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் ஏற்படலாம். | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் |
2017 தேர்தலுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் 13 இடங்களை கூடுதலாக வசப்படுத்தும் நிலையிலும், பாஜக 13 இடங்களை இழக்கும் நிலையிலும் உள்ளன. இங்கும் களம் கண்ட ஆம் ஆத்மி பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. வெற்றி / முன்னிலை நிலவரம்:
கட்சிகள் | தொகுதிகள் |
பாஜக | 32 |
காங்கிரஸ் | 32 |
பிற | 2 |
68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்நிலையில் காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. கருத்துக் கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறின. ஒருசில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றன.ஆரம்பக்கட்ட வாக்கு நிலவரத்தின்படி காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை தொகுதிகள் வித்தியாசமும் சற்று குறைவாக இருப்பதால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. பாஜக முதல்வர் வேட்பாளரான ஜெய்ராம் தாக்கூர் சோரஜ் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
பிரச்சாரத்தில் அசத்திய பாஜக, காங்கிரஸ்: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. அங்கு மீண்டும் ஆட்சியை அமைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜகவின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி ஆதரவாக வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் ஒரு நிதானமான போக்கு தெரியும் என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.