உதவியாளரைத் துரத்தியடித்த அமைச்சர் முதல் தலைவர் மீது கடுப்பு காட்டிய எம்.பி வரை… கழுகார் அப்டேட்ஸ்

தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் முகாம் கண்காணிப்பாளர் சிவபெருமாள், 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைதானார் அல்லவா? இவரை மாட்டிவிட்டதே அந்த அலுவலகத்தின் உயர் போலீஸ் அதிகாரிதானாம். சிவபெருமாளின் பின்னணி அப்படி! அவரின் குடும்பத்தினர் சிலர் காவல்துறையில் பணியாற்றி வருவதால், அமைச்சுப் பணியாளரான இவர் தன்னையும் போலீஸ் அதிகாரி என்று சொல்லி கெத்து காட்டியிருக்கிறார்.

கூடவே, ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பூந்தி, லட்டுகளும் வாங்கினாராம். இதையறிந்து அதிர்ந்துபோன ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், ‘இவரைப் போன்றவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எரிந்து விட வேண்டும்’ என்று சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்க வைத்துவிட்டாராம். இதேபாணியில் வேறு அமைச்சு பணியாளர்கள் யாரும் ஆட்டம் போடுகிறார்களா என்று அலசி ஆராய்ந்ததில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதே ரேங்கில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் வில்லங்கமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை ‘கண்ணி’ வைத்து காத்திருப்பதால், சீக்கிரமே அவரும் சிக்கலாம் என்கிறது காக்கி வட்டாரம்.

தி.மு.க-வில் வாரிசு அரசியல் பெரிய விஷயமில்லைதான். ஆனால், ஈரோடு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்த விழா, உடன்பிறப்புகளையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பிறந்தநாள் கொண்டாடியவர் 14 வயது பையன். வாழ்த்துச் சொல்ல வந்த மாவட்ட, ஒன்றிய, நகர், கிளைக் கழக நிர்வாகிகளுக்கோ 40, 50 வயதுக்கு மேல். மாவட்ட செயலாளரின் மேஜையில் கருப்பு சிவப்பு துண்டு அணிந்தபடி அந்தப் பையன் கேக் வெட்டும் புகைப்படம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பையன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவத்தின் மகன் என்பதால், எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் வைத்து செய்துவிட்டார்கள். விஷயத்தை தலைமைக்கழகம் வரையில் கொண்டு போயிருக்கிறார்கள் மா.செ-வுக்கு எதிரானவர்கள். விசாரித்தால், இந்தக் கூத்துக்கு காரணம் ஓர் ஒன்றிய செயலாளர்தானாம். முருகப்பெருமானின் பெயர்கொண்ட அவர், மா.செ-யின் இதயத்தில் இடம் பிடிப்பதற்காக, அவரது மகனுக்கு பேனர் வைத்தும், கொடி, தோரணம் கட்டியும் தடபுடல் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதோடு நிற்காமல் ஊரில் உள்ள வி.ஐ.பி-க்கள், ஒப்பந்ததாரர்களை அழைத்து காஸ்ட்லியான பொருள்களையும், பணமுடிப்புகளையும் கிஃப்டாகக் கொடுக்க வைத்திருக்கிறார். “நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்படி ஆளாளுக்கு கிளம்பிடுவாங்க… கட்சி தாங்குமா தலைவரே?” என்று கேட்கிறார்கள் தி.மு.க-வினர்!

கடலோரத் தென்மாவட்ட தி.மு.க-வில் ஓரங்கட்டப்படிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கட்சியில் ஆடிட்டிங் குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. கால் நூற்றாண்டாக மாவட்ட செயலாளராக இருந்த அவர், உள்ளாட்சி தேர்தலில் பார்த்த உள்ளடி வேலையால் பதவியை இழந்திருந்தார். “அதிருப்தியில் இருக்கிறார்… காவிக் கட்சிக்குத் தாவப்போகிறார்” என்று கிளப்பிவிட்டும் தலைமையின் கருணைப்பார்வை அவர்மீது விழவில்லை. கடைசியில் அந்தக் கடல் ராஜன், தன் மனைவியின் மூலம் திருமதி முதல்வர் ரூட்டைப் பிடித்திருக்கிறார். அம்பாள் அருளாலேயே கடல் ராஜனுக்கு மன்னிப்பும், பதவியும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் கடலோர உடன்பிறப்புகள்.

வடமாவட்டத்தைச் சேர்ந்த அந்த கணபதி அமைச்சர் தன்னிடம் வேலை கேட்டுவரும் கட்சிக்காரர்களுக்கு குறைந்தபட்சம் தனியார் கம்பெனிகளிலாவது வேலை வாங்கித் தந்துவிடுகிறாராம். பின்னாலேயே, துதிக்கையை நீட்டி காணிக்கையும் கேட்கிறார். “என்ன அண்ணே, எங்ககிட்டயே இப்படியா?” என்று இழுக்கும் நிர்வாகிகளிடம், “மற்ற அமைச்சர்களைப் போல எனக்குப் பெருசா வரும்படி இல்லப்பா… கட்சி செலவு இருக்குல்ல… நான் என்ன பண்றது?” என்று அப்பாவியாகக் கேட்கிறாராம்.

தன் நேர்முக உதவியாளர், ஐ.டி விங்கைச் சேர்ந்த இளைஞர் ஆகிய இருவரையும், “முகத்திலேயே முழிக்காதீங்க!” என்று எச்சரித்து விரட்டிவிட்டுவிட்டாராம் பசுமை அமைச்சர். பின்னணியை விசாரித்தால் அமைச்சரின் கோபம் நியாயம்தான் என்று தோன்றும். அமைச்சரின் உதவியாளரான அந்த அதிகாரி, ஏற்கெனவே மலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நங்கூரம் போட்டிருந்தவர். இரண்டு கலெக்டர்களுக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். பெண் கலெக்டர் பெயரில் லஞ்சம் பெற்றதாக இரவோடு இரவாக தூக்கியடிக்கப்பட்ட பெருமையும் அவருக்கு உண்டு. இதன் பிறகே முட்டிமோதி பசுமை அமைச்சரின் நேரடி உதவியாளர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? அமைச்சருக்கே தெரியாமல் அவர் பெயரைச் சொல்லி, பல லட்டுகளை வீட்டுக்குப் பார்சல் செய்துவிட்டாராம் உதவி. இதற்கு அந்த ஐ.டி விங் இளைஞரும் கூட்டாம். இவர்களின் மோசடியைக் கண்டுபிடித்த வனத்துறை பெண் அதிகாரி, முதல்வரிடம் புகார் வாசித்திருக்கிறார். “அவங்க ரெண்டு பேரையும் உடனடியா மாற்றவில்லையென்றால் உங்களையே மாற்ற வேண்டிவரும்” என மேலிடம் எச்சரித்ததாலேயே, அமைச்சர் அவர்களை விரட்டியடித்திருக்கிறார்.

2019 தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒன்றை சீட்டில் நிறுத்தப்பட்டு எம்.பி-யாக்கப்பட்டவர் ஏ.கே.பி.சின்ராஜ். தலைமைமீதான அதிருப்தியை தொடர்ந்து வெளிக்காட்டிவரும் இவர், சமீபத்தில் ராசிபுரத்தில் நடந்த அரசு விழாவில், “நான் மட்டுமல்ல, என் குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. தற்போதைய சூழலில் அரசியலுக்கு வருவதே விரும்பத்தகாத ஒன்று!” என்று கடுப்பாகப் பேசியிருக்கிறார். இவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் ஈ.ஆர்.ஈஸ்வரனுக்கும் டேர்ம் சரியில்லாததே இந்த குமுறலுக்குக் காரணமாம்.

எம்.பி சின்ராஜ்

இத்தனைக்கும், ‘எந்தச் சூழலிலும் லஞ்சம் வாங்க மாட்டேன். நான் வகிக்கும் எம்.பி-க்கான சம்பளத்தைக்கூட கட்சிக்கே கொடுத்துவிடுவேன்’ என்று தேர்தலின்போது மேடைதோறும் முழங்கியவர் அவர். இடையில் என்ன நடந்ததோ கட்சி நிகழ்ச்சியில் தலை காட்டுவதையே அந்த எம்.பி நிறுத்திவிட்டார். சில மாதங்கள் தன் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்த அவர், திடீரென அதையும் நிறுத்திக்கொண்டாராம். கேட்டால், தலைமை தனக்கு உரிய மரியாதை தருவதில்லை என்கிறாராம் எம்.பி. “நம்ம கட்சிக்கு இருக்கிறதே ரெண்டே ரெண்டு மக்கள் பிரதிநிதிகள்… ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கொரு திசையில் முறுக்கிக்கொண்டால், அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது?” என்று கவலையில் இருக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.