இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரும், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், சட்டமேதையுமான டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் டிசம்பர் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அப்போது, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன.
சென்னையில் அமைந்திருக்கும் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்த வந்தார். அப்போது, அவர் மீது காலணி வீசப்பட்டது. அது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 40 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அம்பேத்கர் நெற்றியில் திருநீரும் குங்குமமும் இட்டு, காவி நிறத்தில் சட்டை அணிந்திருப்பது போல சுவரொட்டி வெளியிட்டதுதான், அர்ஜுன் சம்பத் மீது காலணி வீசப்பட்டதற்கு முக்கியக் காரணம். அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியின் சார்பில் பல இடங்களில் அந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில், ‘காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்’ என்று வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
சர்ச்சைக்குரிய வகையிலான அந்த சுவரொட்டியைக் கண்டு கொதித்துப்போன விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, அம்பேத்கர் மணி மண்டபத்துக்குச் சென்ற அர்ஜுன் சம்பத் மீது காலணிகளும் தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக, வி.சி.க-வைச் சேர்ந்த வன்னியரசு உட்பட 40 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
அதற்கு முன்பாக, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக செல்லும்போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பட்டினம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் மனு தாக்கல் செய்தார். அப்போது, ‘அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவிச்சட்டை அணிவிக்க மாட்டேன். விபூதி, குங்குமம் பூச மாட்டேன்’ என்று உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் உத்தரவாதக் கடிதம் தாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இதேபோல, தஞ்சாவூரிலும் ஒரு பிரச்னை. தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க-வினர் பேரணியாகச் சென்றிருக்கிறார்கள். அங்கு திரண்டிருந்த வி.சி.க-வினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என்று பா.ஜ.க-வினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னொருபுறம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டுமென்று பா.ஜ.க-வினர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்களையும் குறிப்பிட்டு, வி.சி.க-வை பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்திருக்கிறார். “தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அம்பேத்கர் சிலைகளை, அம்பேத்கர் மணிமண்டபத்தை வி.சி.க-வினர் சொந்தம் கொண்டாடிவருகிறார்கள். அம்பேத்கர், பன்முகம் கொண்ட ஒரு தேசியத் தலைவர். அவரை ஒரு சாதிக்குள் அடைத்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் சிறுமைப்படுத்திவருகிறார்.

கடந்த இரு வருடங்களாக, அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதைச் செலுத்த செல்லும் பா.ஜ.க-வினர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் செயலில் வி.சி.க-வினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் மணிமண்டபத்தை தங்களின் சொந்த இடம் போல கருதிக்கொண்டு அங்கே யார் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்று முடிவு செய்வது தாங்கள்தான் என்ற தோரணையில் வி.சி.க-வினரை அனுமதிப்பது முறையல்ல” என்று நாராயணன் திருப்பதி அறிக்கையில் கூறியிருக்கிறார்.
சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ‘நான் யாருக்கும் அடிமை இல்லை… எனக்கும் யாரும் அடிமை இல்லை. கோயில்களில் எப்போதும் ஆடுகளை பலியிடுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல’ என்று மிகப்பெரிய பழமொழி தந்த மிகப்பெரிய தலைவர் அம்பேத்கர். இந்த நாட்டின் பெருமை வல்லபபாய் படேல் அல்ல. அம்பேத்கர் தான் இந்திய நாட்டின் பெருமை. எனவே, நாடாளுமன்ற கட்டடத்துக்கு அம்பேத்கர் பெயரை வைப்பது பொருத்தமானதாக இருக்கும்” என்று சீமான் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் தலித் முரசு புனிதப்பாண்டியனிடம் பேசினோம்.
“செருப்பு மாலை போடுவது, சாணியைப் பூசுவது என்று அம்பேத்கர் சிலைகள் அவமரியதை செய்யப்படும் சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன. அதற்கு சற்றும் குறைவில்லாததுதான், அம்பேத்கருக்கு விபூதி குங்கமும் வைத்து காவி அம்பேத்கர் என்று சுவரொட்டி ஒட்டிய சம்பவம். அம்பேத்கரைப் புகழ்வதுபோல, அவரை இழிவுபடுத்துகிறார்கள். அப்படிச் செய்பவர்கள் மீது கோபம் வருவது இயல்பானது.
எல்லா கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். அவர்களை யாராவது தடுக்கிறார்களா? இந்துத்துவாவாதிகள் மாலை போடுவதை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? அம்பேத்கருக்கு காவி உடை அணிவிப்பது என்பது, அவருக்கு செருப்பு மாலை போடுவதற்கு இணையானது. ‘நான் இந்து அல்ல… நான் இந்துவாக சாகமாட்டேன்’ என்று சொன்னவர் அம்பேத்கர்.

அப்படிப்பட்டவரை ஓர் இந்துவாக சித்திரிப்பது என்ன நியாயம்? இவர்கள் தங்களின் வாக்கு அரசியலுக்காக, அம்பேத்கரைப் புகழ்வதாக காண்பித்து, அவரை இழிவுதான் செய்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அம்பேத்கரின் தத்துவத்தையோ, கொள்கைகளையோ விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. சுதந்திர இந்தியாவில் அம்பேத்கர் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள் அவர்கள். மாறாக, அம்பேத்கர் குறித்து எதிர்க்கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள்.
அம்பேத்கர் எழுதிய நூல்களை அவர்கள் தடைசெய்திருக்கிறார்கள். மராத்வாடா பல்கலைக்கழகம் அம்பேத்கர் பெயரில் அமையக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் இந்துத்துவவாதிகள். தமிழில் அம்பேத்கரின் நூல் தொகுதிகளை வெளியிடுவதற்கு மத்திய அரசு மானியம் கொடுக்காததால், பத்து ஆண்டுகளாக அந்த நூல் தொகுதி வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே அம்பேத்கர் மீது அவர்களுக்கு மரியாதை இருக்குமானால், ஏன் மானியம் கொடுக்கவில்லை? அந்த நூல் தொகுதியை மராத்தியில் ஒன்பது லட்சம் பிரதிகள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 30,000 பிரதிகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். எனவே, மத்திய பா.ஜ.க அரசும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் மானியம் கொடுக்காததால் அம்பேத்கர் நூல் தொகுதி தேங்கிக்கிடக்கிறது.

அம்பேத்கரை எதிர்க்க முடியாமல், அவரைத் தன்மயமாக்கி, அவரை இந்துவாக மாற்ற முயல்கிறார்கள். தமிழ்நாட்டில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும், தலித் வாக்குகளைப் பெறுவதற்காகவும் இந்துத்துவாவினர் மேற்கொண்டுவரும் முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது” என்கிறார் புனிதப்பாண்டியன்.