மதுரை மத்திய சிறைசாலையில் உள்ள கைதிகள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்தல் உள்ளிட்ட சிறு தொழில்களில் ஈடுபடுத்தபடுகின்றனர்.
இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆதரவற்றோருக்கும் உதவி செய்து வருகின்றனர்.
இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் அந்த ஊழல் தொடர்பாக எந்தவிதமான அறிக்கையும் நிர்வாகத்திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. இதனால், அந்த புகார் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததால், சிறையில் அதிகாரிகளால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஒரு சில மோசடி உண்மை என்பது தெரியவந்தது. அத்துடன் அங்கு பணிபுரியும் சிலரிடம் பணத்தையும் சிறை நிர்வாகம் பிடித்தம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஸ் பூஜாரி, மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவரும் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறையில் பணியாற்றிய ஒன்பது பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.