மதுரை வந்த தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருந்துகங்களில் ஆய்வு செய்தார்.
தத்தனேரி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்றவர், அங்கே ஒவ்வொரு நோயாளிகளிடமும் வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், `நோய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கிறார்களா? குறைபாடுகள் இருக்கின்றதா?’ எனவும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்த சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேத மருத்துவமனைகளிலும், பராமரிக்கப்படும் பதிவேடுகளையும், மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “இ.எஸ்.ஐ மருத்துவமனைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் மதுரையில் ஆய்வு மேற்கொண்டேன். மேலும் தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து இ.எஸ்.ஐ மருத்துவமனைகளிலும் தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் சிறப்பாக கிடைக்க வேண்டும் என ஆய்வு செய்து வருகிறேன்.
தத்தனேரியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, 60 ஆண்டுகளைக் கடந்து செயல்படுகிறது. யுனானி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் மற்றும் இங்கு வரும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகளிடம் விசாரித்தபோது குறைகள் ஏதுமில்லை” எனத் தெரிவித்தனர்.
‘கடந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு நடந்தது’ குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “யார் தவறு செய்தார்களோ அவர்கள்மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். ஒப்பந்த தொழிலாளர்கள் குறைவான சம்பளம் குறித்த புகாருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் மொத்தம் 67,00,000 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்திருக்கின்றனர். தமிழக முதல்வர் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற நிலையை போக்க மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
அந்த அடிப்படையில் இதுவரை தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, அதன் மூலமாக 1,11,000 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுத் தந்திருக்கிறோம்.
மேலும் தமிழக முதல்வர் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்” என்றார்.