
2022 – அதிக பிரபல யு-டியூப் வீடியோவில் 2ம் இடம் பிடித்த 'அரபிக்குத்து'
உலக அளவில் வீடியோ தளங்களில் முதலிடத்தில் உள்ளது யு டியூப். தமிழ்த் திரைப்படங்களின் டீசர், டிரைலர், பாடல்கள் என விதவிதமாக அதில் வீடியோக்களைப் பதிவிட்டு தங்களது படங்களுக்கு வெளியீட்டிற்கு முன்பே நல்ல விளம்பரங்களைத் தேடிக் கொள்கிறார்கள்.
எந்த ஹீரோவின் பாடல், இசையமைப்பாளரின் பாடல் அதிகப் பார்வைகளைப் பிடிக்கிறது என அவர்களது ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதல்களும் நடக்கும். இந்த 2022ம் ஆண்டில் நிறைய பாடல்கள் அப்படி அமைந்துள்ளன. இருந்தாலும் இந்திய அளவில் 2022ம் ஆண்டு அதிகப் பிரபலமான பாடல்களில் தமிழ்த் திரையுலகத்திலிருந்து 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' லிரிக் பாடல் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத், ஜோனிதா காந்தி பாடிய பாடல் இது. அடுத்து இதன் வீடியோ பாடல் 9ம் இடத்தையும் பிடித்துள்ளது.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் 'புஷ்பா' தெலுங்கு படத்தின் 'ஸ்ரீவள்ளி' வீடியோ பாடல் முதலிடத்தையும், 'சாமி சாமி' வீடியோ பாடல் 3ம் இடத்தையும், 'புஷ்பா' ஹிந்திப் படத்தின் 'ஓ போலேகா..ஓஓ போலேகா' பாடல் 6ம் இடத்தையும், 'புஷ்பா' தெலுங்கு படத்தின் 'ஓ அன்டாவா…ஊஊ அன்டாவா' பாடல் 7ம் இடத்தையும் பிடித்துள்ளது.

டாப் 10 பிரபல பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வந்த 'புஷ்பா' பாடல்கள் 4 இடங்களையும், அனிருத் இசையில் வந்த 'பீஸ்ட்' பாடல் 2 இடங்களையும் என மொத்தமாக 6 இடங்களை தென்னிந்திய படங்களே பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.