Gujarat Results : 135 பேரின் உயிரை பறித்த பால விபத்து… பாஜகவுக்கு எந்த அளவில் பாதிப்பு?

Gujarat Morbi Election Result 2022 : குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு டிச. 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இருக்கட்டமாக நடைபெற்றது. மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும், முதல்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குகளும், 2-வது கட்டத்தில் 64.39 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக, இந்த தேர்தலில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகின. 2018இல் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவை தேர்தலில், 71.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை அதைவிட குறைவாகவே பதிவாகியுள்ளது. 

37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது முதல் சுற்று முடிவின்படி பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏறத்தாழ 132 இடங்களில் பாஜகவும், 40 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன. 6 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளன.

அந்த வகையில், 7ஆவது முறையாக பாஜகவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய ஜீ நியூஸின் கருத்துக்கணிப்பிலும் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன், அதாவது, அக்டோபர் 29ஆம் தேதி மாலையில், குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் விபத்துக்குள்ளானது. அந்த கொடூர விபத்தில் மொத்தம் 135 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த விபத்து நிச்சயம் குஜராத்தின் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் எதிர்பார்க்கப்பட்டது. 

அதிகாரிகளின் மீது எழுந்த அலட்சிய குற்றச்சாட்டுகள், எம்எல்ஏ, எம்பிக்களின் செயல்பாடின்மை ஆகியவை பெரிதும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அவறை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது சந்தேகமாக இருந்தது. மோர்பி பால விபத்தை பிரச்சாரங்களில் எதிர்கட்சிகள் குறிப்பிடாத நாளே இல்லை. மோர்பியில் கடந்த டிச.1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.   

மோர்பி தொகுதியில் பட்டீதர் சமுதாயத்தின் வாக்குகள் அதிகமாக இருக்கும். அந்த தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக இருந்த பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்கு பதில், கந்திலால் அமருதா என்பவர் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார்.  

இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில், மோர்பி தொகுதியில் நிலவரம், விபத்தின் தீவிரத்தன்மையை வெளிகாட்டியுள்ளது. காங்கிரஸ் ஜெயந்திலால் ஜெரஜ்பாய் படேல் என்பவரையும், ஆம் ஆத்மி பங்கஜ் ரன்சாரியா என்பவரையும் அங்கு போட்டியிட வைத்துள்ளது. இதில், முதல் சுற்று நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளப் ஜெயந்திலால், பாஜக வேட்பாளரை விட 6000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். 

ஆனால், அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளரை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தற்போது, இந்த தொகுதியில் பாஜக – காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி முற்றிலுமாக போட்டியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.

மோர்பி பால விபத்திற்கு பாஜக மீது மக்கள் பெரும் அளவில் கோபத்தில் இல்லை என்பது வாக்கு எண்ணிக்கையில் வெளிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குஜராத், ஹிமாச்சல் மட்டுமின்றி பிகார் உள்ளிட்ட 6 மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.