சமீப காலமாக பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்றும், மகளிருக்கு இலவசமாக கொடுக்கப்படும் பேருந்து பயணம் ரத்து செய்யப்பட உள்ளது என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை காரணமாக அரசு போக்குவரத்து கழகம் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக விரைவில் அரசு பேருந்து பயணச் சீட்டின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் திமுக ஆட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மகளிருக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதியையும் ரத்து செய்ய உள்ளதாக அந்த தகவல் தெரிவித்து வருகின்றது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியது. இத்தகைய நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பொதுக்குறிச்சி கிராமத்தில் இன்று நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டீசல் விலை காரணமாக அரசு போக்குவரத்து கழகமானது பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாகவும், இதனால் கட்டணம் உயர உள்ளதாகவும் கூறப்படுகிறது.. தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சேவை நோக்கில் செயல்படுத்தப்படும் இவை பொதுமக்களுக்கு எப்போதும் சுமையாக இருக்கக் கூடாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.