ஹர்திக் படேல் வெற்றி: கடந்த 2012-ல் குஜராத்தில் படேல் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அந்த சமுதாயத்தை சேர்ந்த ஹர்திக் படேல் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
கடந்த 2017-ல் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். கடந்த 2020-ம் ஆண்டில் காங்கிரஸில் அதிகாரபூர்வமாக இணைந்தார். கடந்த மே மாதம் அவர் பாஜகவில் ஐக்கியமானார். விராம்காம் தொகுதியில் போட்டியிட்டார்.
இதில் 98,600 வாக்குகள் பெற்று ஹர்திக் படேல் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் குவார்ஜி 47,000 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் லக்காபாய் 42,400 வாக்குகளும் பெற்றனர்.
ஜடேஜா மனைவி ரிவாபா வெற்றி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பாஜக சார்பில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிபேந்திர சிங்கும், ஆம் ஆத்மி சார்பில் கர்சனும் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரிவாபாவுக்கு எதிராக அவரது குடும்பத்தினரே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நயாபா, ஜாம்நகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். அவரும் ஜடேஜாவின் தந்தை அனிரூத்தும் சேர்ந்து ரிவாபாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.
கடுமையான எதிர்ப்புகளை சமாளித்து ரிவாபா 84,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் கர்சன் 33,800 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திர சிங் 22,800 வாக்குகளும் பெற்றனர்.
மோர்பி தொகுதியில் பாஜக வெற்றி:
கடந்த அக்டோபர் 30-ம் தேதி குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து 141 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
எனினும் மோர்பி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தி லால் 1.13 லட்சம் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்திலாலுக்கு 52,000 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் பங்ராஜுக்கு 17,261 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
மோர்பி பாலம் விபத்தின்போது பாஜகமூத்த தலைவர் காந்திலால் நேரடியாக ஆற்றில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.