சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் அளவிலான ஆர்ப்பாட்டங்கள் வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் 18 மாத ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 9-ம் தேதி பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.9) பேரூராட்சி அளவில் அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.