கும்பகோணம்: “பாஜக முன்பை விட பலவீனமடைந்துள்ளது. பாஜகவின் குஜராத் வெற்றி கூட நீர்க்குமிழியைப்போலத்தான்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் ஜனரஞ்சனி மகாலில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாக்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க விட்டு செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவிலேயே பதவி வேண்டாம் என்றவர் ஞானி சோனியா காந்தி. காங்கிரஸ் கட்சி சார்பில் 1 சட்டமன்ற தொகுதிக்கு 100 இடங்களில் கொடியேற்றுவதற்கு முடிவு செய்து தமிழகம் முழுவதும் 23,400 இடங்களில் கொடியேற்றுவதால், 23 சதவீதம் வாக்கு வங்கி உயரும்.
தற்போது பெய்யும் மழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசும், நிர்வாகமும் தயாராக இருக்கிறது.
வடமாநிலத்தில் நடைபெற்ற 2 மாநிலத் தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலத்தை கைப்பற்றியுள்ளோம். இந்த வெற்றி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் வெற்றியாகும். பாஜக எவ்வளவோ முயற்சி செய்தும் இங்கு வெற்றி பெறமுடியததால், அக்கட்சியில் இறங்கும் முகம் தொடங்கப்பட்டுவிட்டது.
குஜராத் வெற்றிகூட நீர்க்குமிழியைப்போலத்தான். அவர்களது வெற்றி என்பது மதவெறியை உருவாக்கி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை விரும்பாதவர்கள் கூட வாக்களிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி தற்காலிகமானதாகும். கொள்கை சார்ந்த வெற்றியாக நான் கருதவில்லை. அக்கட்சியின் வெற்றி நீடித்து இருப்பதாக தெரியவில்லை. அவர்களுக்கு பின்னால் எந்தவிதமான தத்துவார்த்தமான பலமும் கிடையாது. 2 மாபெரும் சக்திகளுக்கிடைய போட்டியிடும்போது இடையில் புகுந்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களிலுள்ள கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும்தான். அகில இந்தியக்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக, மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மை கொள்கையுடன் உள்ள கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருக்கின்றோம்.
இந்தியாவில் பிரதமர் மோடி என்ற பிம்பம் உடையக்கூடியதுதான், பிம்பங்களை எளிதாக உடைக்கலாம். அந்த சக்தி இருப்பதால் தான் இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி பெற்று அந்தப் பிம்பம் உடைந்திருக்கிறது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அதிகமான கொகுதிகளை கேட்டு, கடந்த முறையை விடக் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் இன்றைய மற்றும் அன்றைய தலைவர்களால் வெற்றி பெற முடியவில்லை. வெற்றி பெறாதவர்கள் வளர்ந்திருக்கின்றோம் என்று சொன்னால், அதனை ஆமாம் என்றுதான் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜகவிற்கு என ஒன்றுமே கிடையாது. பாஜக முன்பை விட பலவீனமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கான அவசியம் இப்போது கிடையாது. மதச்சார்பின்மையில் திமுக உறுதியாக இருப்பதால், அக்கட்சியை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
ஆளுநர் விஷயத்தில் திமுக நாகரிகத்தைப் பின்பற்றுகிறது. பாஜக நாகரிகத்தை பின்பற்றவில்லை. தமிழக ஆளுநர் 100 சதவீதம் அரசியல் செய்கிறார் என்பதுதான் உண்மை. தமிழக ஆளுநர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளராகக் காட்சியளிக்கின்றார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனித்து போட்டியிடுவதாகக் கூறவில்லை” எனத் தெரிவித்தார்,
முன்னதாக 100 ஆண்டுகள் பழமையான கோபால்ரால் நூலகத்தை சுற்றிப்பார்த்தார். பேட்டியின்போது, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உடனிருந்தார்.